Book Type (புத்தக வகை) : அகராதி
Title (தலைப்பு) : கல்வி அகராதி
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN-2013-01-01-119
ISBN : 97-895-568-501-85
EPABNo : EPAB/02/18829
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2013
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 19 cm 12 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 112
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

உலகின் வளர்ச்சியடைந்த மொழிகளிலே கல்வி அகராதிகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழிற் கல்வி அகராதிகள் எவை யேனும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த முயற்சி முதல் முயற்சியாகவும் முன்னோடி முயற்சியாகவும் அமைந்துள்ளது. 
சொற்களுக்குரிய பொருள் விளக்கங்களோடு கூடிய ஆக்கமாக இது இடம்பெற்றுள்ளது. மேலைத்தேய நவீன அகராதி ஆக்கங்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்த முயற்சி இடம்பெற்றுள்ளது. கல்வி ஆளுமைகள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்ச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களும் தரப்பட்டுள்ளன. பொருள் விளக்கத்துக்கு மேலும் துணை செய்யும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இந்த முயற்சிக்கு உற்சாகமூட்டிய நண்பர்களுக்கும், இதழாசிரியர்களுக்கும் வெளியீட்டாளருக்கும் நன்றி.

சபா.ஜெயராசா

Full Description (முழுவிபரம்):

இன்று உலக மொழிகள் நவீனமடைந்து வருகின்றன. இதனால் தனித்தனி புலமைத்துறைகளுக்கான அகராதிகளின் வெளியீடுகள் சிறப்புப் பரிமாணங்களாக அமைந்து வந்துள்ளன. தமிழ்மொழியில் பொது அகராதிகளின் வெளியீடுகளைத் தொடர்ந்து அடுத்து நிகழ வேண்டியது சிறப்பு அகராதிகளின் ஆக்கமாகும். தமிழ்மொழி நவீன உலகில் நுழைவதற்கு அத்தகைய முயற்சி அவசியமானதாகும். 
தற்காலத் தமிழை வரலாற்று மொழியியலாளர்கள் புதுத் தமிழ் என்றே குறிப்பிடுகின்றனர். 'புதிய தமிழ் என்று சொல்லும் போது புதிய காலத்தில் வழங்கும் தமிழ் என்று பலரும் பொருள் கொள்ளுவார்கள். புதிய காலம் என்னும் போது புதிய வாழ்க்கை மதிப்பீடுகளைக் கொண்ட காலம் என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்தப் புதிய மதிப்பீடுகளை வெளியிடும் தமிழையே புதிய தமிழ் என்று சொல்ல வேண்டும். புதிய மதிப்பீடுகள் தமிழ் சமூகத்தின் பண்பாட்டு அடிப்படையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களினால் பிறப்பவை' என்று பேராசிரியர் இ.அண்ணாமலை குறிப்பிடுவார். மொழிக்கும் சமூகத்துக்கும் நெருங்கிய உறவுண்டு. மொழி வழக்கும் சமூக உணர்வைப் பிரதிபலிக்கும் என்ற பொது உண்மைகளையொட்டி புதிய தமிழை வரையறுக்கலாம். 
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் மற்றும் பொருள்கோடல் விரிவாக்கங்களையும் கலைச்சொற்களின் பெருக்கத்தையும் 'புதிய தமிழ்' என்னும் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது அகத்தூண்டுதலாலும் புறத்தூண்டுதலாலும் சமூகத்தில் ஏற்படும் புதிய போக்குகளாலும் மொழி மாறுதலடைகிறது. 
புதிய தமிழில் இரண்டு புதிய சமூகப் போக்குகளின் தாக்கம் இருக்கிறது. முதலாவது தற்காலத்தில் வளர்ந்துள்ள சமூக மாற்றத்தால் வந்த இலக்கிய வளர்ச்சி வட்டார இலக்கியத்தின் சிறப்பு அம்சம் வட்டாரத்திற்கே உரித்தான இருத்தலனுபவங் களை தமிழ் சமூகத்தின் பொது அனுபவமாக்குதல் ஆகும். பேச்சு மொழியில் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டு வந்த இந்த வட்டார கலாசார அனுபவங்கள் எழுத்துத் தமிழின் மூலம் பொதுமைப் படுத்தப்படுகின்றன. தமிழ் சமூகத்தின் அனுபவ அடிப்படை விரிவடைகிறது.  à®‡à®°à®£à¯à®Ÿà®¾à®µà®¤à¯, அறிவியல் வளர்ச்சி. தற்காலத்தில் அறிவு நிலை ஒரு மொழிச் சமூகத்தைக் கடந்து உலகம் தழுவிய தாக இருக்கிறது.  à®‡à®¨à¯à®¤ உலகளாவிய அறிவின் அடிப்படையில் பல அறிவுத் துறையின் கருத்துக்களும் பிரச்சினைகளும் எழுதப்படுகின்றன. அளவில் பரந்த தன்மையில் வேறான இந்தப் புதிய அறிவு வெளியீட்டுக்கு ஈடுகொடுக்கிறது புதிய தமிழ். 
இவ்வாறு புதிய தமிழ் இரண்டு வகைகளில் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. தன் பரப்பை விரிவாக்கி யிருக்கிறது. இவை இரண்டும் புதிய தமிழின் உள்ளடக்கத்தில் விரிவை ஏற்படுத்தி அதன் மூலம் மொழியின் பொருளிலும் வடிவத்திலும்  -  à®ªà¯à®¤à®¿à®¯ பொருட்கள், புதிய சொற்கள், புதிய தொடர்கள், புதிய நடைகள், புதிய வெளியீட்டு வடிவங்கள் என்ற முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இவ்வாறு பேராசிரியர் இ.அண்ணாமலை புதிய தமிழின் உள்ளடக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை நுணுக்கமாகவும் விரிவாகவும் அடை யாளப்படுத்துகிறார். புதுத்தமிழின் பல்பரிமாண அணுகுமுறைக் கான விளக்கத்தையும் முன்வைக்கிறார். 
ஆகவே புதுத்தமிழின் ஆக்கத்திற்கும் வளத்திற்கும் அகராதிகளின் உருவாக்கமும் பயன்பாடுகளும் முக்கியம். தமிழில் அகராதிகளின் வெளியீடுகள் அறிவுப் பண்பாட்டின் புதிய அடையாளமாகிறது. இந்த அடையாள இருப்பின் இயங்கு வெளியாக 'கல்வியியல் அகராதி' ஆக்கம் பெற்றுள்ளது. 
பேராசிரியர் சபா.ஜெயராசா கல்வியியல் துறையில் நீண்டகாலம் அனுபவம் கொண்டவர். இவர் இத்துறைசார் அறிவுப்புலம் நோக்கில் வெளியிட்ட நூல்கள் ஏராளம். அறிவு வளரும் பொழுது அவற்றை எடுத்தியம்ப புதிய புதிய கலைச் சொற்கள் உருவாக்கம் பெறும். இவ்வாறான கலைச்சொற்களை உருவாக்கி கல்வியியல் துறை வளம்பெற தீவிரமாக உழைத்து வருபவர் நமது பேராசிரியர். 
புதிய சொற்களின் உருவாக்கத்தின் அடிப்படையில் ஒரு மொழியின் வளர்ச்சியை மதிப்பிடலாம். வழக்கொழிந்த மொழி களிலே புதிய சொல்லாக்கம் இடம்பெறுதல் இல்லை. தொன் மையான மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி காலத்திற்கேற்ப அறிவு வளர்ச்சிக்கேற்ப புதுதமிழின் பரிமாணங்களை உள்வாங்கும் ஆற்றலால்தான் அறிவியல் தமிழாகவும் சிறப்பாக்கமடைகிறது. 
கல்வியியல் துறை பல்பரிமாண உட்பிரிவுகளும் சிறப்புத் தன்மைகளும் கொண்ட கற்கைப்புலம் ஆகும். இத்துறைசார் பேராசிரியராக இருப்பவருக்கு அனைத்துத் துறைகளும் பற்றிய மூலாதாரமான அறிவு அவசியம். கல்வியில் குறிப்பிட்ட ஒரு துறையிலே பொதுவான அல்லது ஜனரஞ்சகமான ஒரு வினா எழுப்பப்படும்போது அது தனது துறைக்கு அப்பாற்பட்டது எனக் கூறி ஒரு பேராசிரியர் ஒதுங்கிவிட முடியாது. இந்த அறிவு ஒழுகலாறு வழியே இயங்குபவர் பேராசிரியர் சபா.ஜெயராசா.
பொதுவாக பேராசிரியர் என்பவர் பொது நிலையிலிருந்து குறிப்பிட்ட ஒரு துறையில் ஆழ்ந்து ஈடுபடும் ஒரு புலமையாளராக வும் தொடர்ந்து தன்னை வளர்த்துக்கொள்பவராகவும் விளங்க வேண்டும். இந்தக் காரணத்தால்தான் இதுபோன்ற அகராதி முயற்சியிலும் பேராசிரியரை ஈடுபட தூண்டியுள்ளது. புதிய புதிய சொற்கள் ஆங்கிலமொழியில் உருவாக்கம் பெறும்பொழுது ஆங்கிலமொழி வாசகர் குதூகலமும் மகிழ்ச்சியும் அடைவர். ஆங்கிலமொழி அகராதிகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய சொற்களை உள்ளடக்கிப் புதுப்பிக்கப்படுகின்றன. புதிய அகராதி பதிப்புக்கள் வேகமாக விற்பனையாகின்றன. இதுபோன்ற சூழல் நம்மிடையேயும் உருவாக வேண்டும். இந்த அகராதி ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்கு வாசகர் ஒத்துழைக்க வேண்டும். 
தமிழ்ச் சூழலில் தமிழ் வாசகர் ஒரு புதிய சொல்லைக் காணும்பொழுது குதூகலிப்பதும் இல்லை, மகிழ்ச்சி கொள்வதும் இல்லை. நமது வாசகர்கள் புதிய சொற்களை சுமையாகவும் வேண்டத்தகாதவையாகவுமே கருதுகின்றனர். இது ஒரு வகையிலே பின்னடைவுக்குரிய மனோபாவம்தான். ஏற்கெனவே இருக்கும் சொற்களே போதும் என்பது வளர்ச்சியை நிராகரிக்கும் வாழ்தல் வெறுப்பு மனோபாவம் உடையது எனலாம். உளவியலாளர் எரிக்புரோம் இந்த மனோபாவத்தை 'நெக்ரோபிலி' என்று குறிப்பிடுவார். இது பற்றிய விளக்கத்தை பேராசிரியர்  à®šà®ªà®¾.ஜெயராசா பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.
நூல் வளமே தொழிற்புரட்சியை உருவாக்குவதற்குரிய அறிகை வளமாயிற்று. நூல் வளத்துக்கும் கல்வி வளத்துக்கும் உள்ள தொடர்புகளை விளக்கியவர்களுள் கல்வியியலாளர் கொமினியஸ் சிறப்பிடம் பெறுகின்றார். பாடநூலாக்கம் கற்றல் கற்பித்தலிலே புரட்சியை உருவாக்கியது. தாமாகக் கற்றல், சுயமாகக் கற்றல் என்ற மாற்று வகையான கற்றல் வளர்ச்சியடைவதற்கு பாடநூல்கள் வழிவகுத்தன. 
சுயகற்றல் என்பதிலிருந்து மேலெழுந்த பிறிதொரு வடிவம் சுயதேடல் ஆகும். சுயதேடல்களே புதிய கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கங்களையும் ஏற்படுத்தும். தன்னிலையிலிருந்து சமூக நிலைக்கும் இருப்பிலிருந்து நிலைமாற்றத்தை நோக்கி நகர்வதற்கும் நூல்களே துணை செய்கின்றன. ஒரு சமூகத்தின் எழுச்சிக்கும் ஆளுமைக்கும் குறியீடுகளாக நூல்களே அமைகின்றன. நூற் பெருக்கம் கொண்ட சமூகங்கள் மேம்பாடு கொண்ட சமூகங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அறிவுப் பிரவாகத்தின் குறியீடாக அமைவது நூற்பெருக்கம். இந்தப் பெருக்கத்தை தமிழுக்கு தந்து அறிவுக்குறியீடாக  à®µà®¿à®³à®™à¯à®•à¯à®ªà®µà®°à¯ நமது பேராசிரியர். 
இவரது ஆக்க மரபில் 'கல்வியியல் அகராதி' தனிச்சிறப்பு மிக்க அடையாளம். பல்கலைக்கழகங்கள் ஆசிரியர் கலாசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றிலே தமிழ்மொழி மூலம் உயர்கல்வி கற்பிக்கப்படும் சமகாலத்தில் கல்வியியல் அகராதியின் தேவை மேலெழுந் துள்ளது. அத்தகையயொரு கவிவுநிலையில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது. கல்வியியல் தொடர்பான பல்வேறு எண்ணக்கருக்களையும் தொகுத்து இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது. 
உயர்கல்விக்கும் பொதுக்கல்விக்கும் உரிய கனதியான நூல்களை வெளியிட்டு வரும் சேமமடு பதிப்பகத்தினர் இந்நூலை வெளியிட்டிருத்தல் அவர்களது நூலாக்கப் பணிக்கு மேலும் ஓர் அணிகலனாகின்றது.  à®¤à®®à®¿à®´à®¿à®²à¯ சிறப்பு அகராதிகளை வெளியிடும் திட்டங்களை உயர்கல்வி நிறுவனங்களில் இருப்போர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அறிவுத் தேவை கருதி முன்வைக்கின்றோம். 
கல்விப் புலத்துக்கு ஓர் அறிய நூல் கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியும் உட்சாகமும் தரும் நிகழ்ச்சியாகும். 

தெ.மதுசூதனன்