Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வித் தத்துவம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-08-01-098
ISBN : 978-955-1857-97-4
EPABNo : EPAB/02/18833
Author Name (எழுதியவர் பெயர்) : சந்திரசேகரம், பத்தக்குட்டி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 228
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 860.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • கல்வியின் வரையறை
  • கல்வியும், மரபும், மாற்றமும்
  • பிளேட்டோ கண்ட கல்வித் தத்துவம்
  • ரூசோ போற்றிய கல்விநெறி
  • கார்ல்மார்க்ஸ் கொண்ட கல்விச் சிந்தனை
  • ஜோன்டூயி வழங்கிய கல்விமுறை
  • காந்தியடிகள் கற்பித்த கல்வித் திட்டம்
  • தாகூர் தந்த கல்விக் கருத்து
  • ஈழத்துச் சிந்தனைக் கதிர்கள்
  • கல்வியும் அரசியலும்
  • கல்வியும் பொருளாதார விருத்தியும்
  • சமூகக் கல்வி
  • சமூகக் கல்விசார் சாதனங்கள்
Full Description (முழுவிபரம்):

'கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே'
என்பது ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார் வாக்கு. மக்களுக் குரிய வீரவாழ்க்கை - பெருமித வாழ்க்கையை கொடுக்கும் நான்கினுள் ஒன்று கல்வி. அக்கல்வி கரையிலது; ஆனாற் கற்பவர் நாட்சிலது. ஆகையாற் கற்பவை கற்பதற்கு ஆசான்துணை இன்றியமையாதது. அத்துடன் இளமையிற் கற்கும் சிறார்க்கு ஆசிரியர் உதவி அத்தியாவசிய மானதாகும். 
ஆசான், தான் கற்பிக்கும் பாடத்தில் மட்டும் வல்லவனாக இருந்தாற் போதாது. பாடத்தைப் போதிக்கும் முறையிலும் தேர்ந்தவனாக இருத்தல் வேண்டும். மேலும், சிறந்த ஆசிரியன் கற்பித்தலுடன் மட்டும் நின்றுவிட் டால் இன்றியமையாதது. ஏனெனில் தன் மாணாக்கர்களை  'உயர் நிலைக்கு உய்விப்பானே' சிறந்த ஆசானாவான். ஆகையால் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் சிறந்த கல்வியை மட்டும் பெற்றிருந்தாற் போதும் என்று அமையாது, ஆசிரியத் தொழிலுக்குரிய பயிற்சியையும் பெற்றுத் தம்மைத் தொழிற்றகைமையுடையவர்களாக ஆக்கிக்கொள்ளல் வேண்டும். 
கல்வியின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்துகொள்ளல், ஆசிரிய தொழிற் பயிற்சியின் ஒரு முக்கிய அங்கமாக இன்று விளங்குகின்றது. இதிற் கல்வித் தத்துவம் என்கின்ற கல்வி மொழியியலும் உள்ளடங்கும். 
'கல்வித்தத்துவம்' என்னும் இந்நூற் கல்வித்தத்துவம் பயில்வோருக்குப் பயன்படக்கூடும். ஆனால் இது எந்த ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்திற்கும் அமைய எழுதப்பெற்ற நூலன்று. பாடநூலாகவோ அல்லது கல்வித்தத்துவம் புகட்டும் ஆசிரியர்களது கைந்நூலாகவோ அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப் பெற்றதுமன்று. இந்நூலை யான் ஆக்கியதன் நோக்கம் கல்வித் தத்துவத்தைப்பற்றி யான் கற்றுச், சிந்தித்துச் சுவைத்து இன்புற்றவற்றை 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கமையத், தமிழ்கூறு நல்லுலகிலுள்ள என் பிற சகோதரர்களும் சுவைத்து இன்புற வேண்டும் என்ற பேரவாவேயாகும். கல்விக்கோள்களை முதற்கண் உளத்தமைத்து முறைப்படுத்தி மேற்புலக் கல்வியாளர் நூல்களை ஒப்புநோக்கி என் பட்டறிவோடு பொருந்திக் கண்டு அதன் பயனாக அமைத்துள்ளேன். எனினும் இந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலோ அன்றிப் படிநூலோ அன்று.
தமிழ்மொழியாம் என் அருமைத் தாய்மொழியில் இந்நூலை யான் வெளியிடுவதால், அச்செம்மொழியில் இத்தகைய துறைகளிற் போதி யளவு நூல்கள் இல்லையென்னும் குறையை நீக்குவதற்கும் என்னாலான தொண்டைச் செய்தவனாவேன். 
இந்நூலின்கண் யான் கோர்த்துள்ள கட்டுரைகளை ஆக்குவதற்கு நேர்ந்த காரணங்களை இங்கு சிறிது விளக்கலாம் என விழைகின்றேன். 
கல்வியின் நோக்கம், அமைப்பு முதலியவற்றையிட்டுப் பல்வேறு கருத்துக்கள் உண்டு. ஆனாற் கல்விச் சான்றோரின் கருத்துக்கமையக் கல்வி என்றால் என்ன என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆகை யாற் கல்வியின் வரைவிலக்கணம் என்ற முதற் கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன். 
உயர்ந்தனவெல்லாவற்றிற்கும் ஒரு மரபு உண்டு. மரபு என்பது, உயர்ந்தோர் ஒன்றை எவ்வழிக் கொண்டனரோ அவ்வழிக் கொள்ளுத லாகும். ஆகையாற் கல்விக்கும் ஒரு மரபுண்டு. ஆனாற் காலத்துக்கு ஏற்றவாறு கல்வி இன்று பல மாறுதல்களைப் பெற்றுள்ளது. இம்மாற்றம் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு நியதியாகும். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்றார் பவணந்தி முனிவர். 'கல்வியின் மரபும் மாற்றமும்' என்ற அதிகாரம் கல்வியின் மரபையும் அது இற்றைவரை அடைந்துள்ள மாற்றத்தையும் விளக்கு வதாகும். 
மனிதவினம் நாகரிகமடையத் தோன்றிய நாள் முதலே கல்வியும் தோன்றியது எனின் அது மிகையாது. ஆனால் அக்கல்வியானது சுரங்கத் தினின்றும் எடுக்கப்பட்ட பட்டை தீட்டாத வயிரமாகவே இருந்து வந்துள்ளது. அக்கல்வியாம் வயிரத்தைப் பட்டைதீட்டி மனிதவினத்திற்கு நன்முறையிற், பயனளிக்கக் கூடியதாக வழங்கியவர்கள் கல்வித் தத்துவ ஞானிகளாவர். பிளேட்டோ, ரூசோ, டூயி, மார்க்சு போன்ற மேலைநாட் டுக் கல்விச் சிந்தனையாளர்களுடன், காந்தி, தாகூர் போன்ற கீழைத்தேயத் தத்துவஞானிகளும், கல்வியை உலோகாயத முறையில் மாற்றியமைத்த பெருமைக்குரியவர்களாவர். ஈழத்தைச் சேர்ந்த நாவலர், விபுலாநந்தர், அநகாரிக்க தர்மபால, சித்திலெவ்வை ஆகியோரும் கல்வி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர்களாவர். ஆகையால், இத்தகைய தத்துவஞானி கள் தம் வாழ்நாளிற் கல்வியின் மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பணியை அறி யாதார், கல்வித் தத்துவத்தைப் பற்றி அறிந்தவராகார். ஆகையாலேயே இப்பெரியார்களைப் பற்றிய கட்டுரைகள். 
இன்றைய கல்விமுறை தனியொருவரது விருப்பு பெறுப்புக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகின்றது. அது ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரநிலை, சமூக அமைப்பு என்பவற்றால் வரையறை செய்யப் படுகின்றது. ஆகையாற் கல்வித் தத்துவத்தைக் கருத்தூன்றிக் கற்கும் ஒருவர் இவற்றைப் புறக்கணித்துவிட முடியாது. ஆகையினாலேயே 'கல்வியும் பொருளாதாரமும்', 'கல்வியும் அரசியலும்', 'சமூகக்கல்வி' என்னும் கட்டுரைகளை இந்நூலின் கண் சேர்த்துள்ளேன்.
கலைத்திட்டம் பற்றிய வரைவிலக்கணம், அதன் அமைப்பு, இலங் கையின் கலைத்திட்டம் ஆகியன எமது நாட்டின் கல்விமுறையில் இன்றைய தேவைகளை விளக்குமுகமாக எழுதப்பெற்றவையாகும். 
ஆசிரியத்துவம் என்பது ஊதியம் குறைந்த ஒரு தொழிலாக இருக்க லாம். ஆனால் அது உன்னதமானவொன்றாகும். ஆகையால், அத்தொழி லில் ஈடுபடுவோர், உள்ளுவதும் ஊக்குவதும் உயர்வுடையனவாக விருத்தல் வேண்டும். இக்கருத்தை விளக்குமுகமாக அமைந்ததே 'ஆசிரிய இலக்கணம்' என்னும் அதிகாரம். 
இவற்றைத் தவிரப் 'பல்கலைக்கழகக் கல்வித் தத்துவம்', 'கல்வியும் உலகநெறியும்' என்னும் கட்டுரைகளும் இந்நூலில் இணைந்துள்ளன. 
இந்நூல், கன்னித்தமிழில் என் கன்னிப்படைப்பு. ஆகையால் இதிற் குற்றங் குறைகள் காணப்படலாம். ஆனமையால், 'நீர் ஒழியப் பாலுண் குருகினைப்' போன்று குறைநீக்கி நிறைகொண்டு அமைவுறுதலே சான்றோர்க்குரிய சால்புடைமையாகும். எனினும், என்பாற் கொண்ட பேரன்பினால், எனக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தற் பொருட்டு இந்நூலில் யாதேனும் குற்றங்குறைகளிருப்பின், அவற்றை எனக்குச் சுட்டிக்காட்டின் தமிழன்பர்களுக்கு நன்றியுள்ளவனாவேன். 
ஈழத்துக் கல்வித்துறையில் இரு ஜோதிகளாக விளங்கும் அம்மையார் இரத்தினா நவரத்தினம் அவர்கட்கும், எனது பேராசான் கு.நேசையா அவர்களுக்கும், அவர்கள் வழங்கிய அணிந்துரைக்கு எனது இதயபூவமான நன்றி. எனது ஆத்ம நண்பர் திரு.சி.சிவகுருநாதன் அவர்கள் இந்நாட்டிற் பல நூல்களை வெளியிட்டு மரபுத் தமிழும் தற்காலத்தமிழும் பரப்புபவர். அவரது ஊக்கமே எனது நூலின் வித்தாகும். செட்டியார் அச்சகத்தினர் தன்னலம் கருதாது இந்நூலைச் செவ்வனே முடித்துத் தந்துள்ளார்கள். அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். இறுதியாக, இந்நாட்டு மாணவ உலகமும் ஆசிரிய உலகமுமே எனது கல்விக் கர்த்தாக்கள் என்பதைப் பரிவுடன் கூற விரும்புகிறேன்.
ப.சந்திரசேகரம்